திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திங்கட்கிழமை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
வாக்குப்பதிவின்போது தாடிப்பத்திரி, நரசராவ்பேட்டையில் இரு கட்சியினர்க்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டு தொண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஒருவழியாக வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் தொண்டர்களின் ஆவேசம் குறையவில்லை.
குண்டூர் அருகே உள்ள நரசராவ்பேட்டை நகரப் பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுதிரண்டு மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்களுக்குள் கலவரம் வெடித்ததை அடுத்து, தெலுங்கு தேசம் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபி ரெட்டி சீனிவாஸ் எம்எல்ஏ வீட்டின் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காவலர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
உடனே அங்கிருந்து கலைந்த தொண்டர்கள் மீண்டும் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஓடிவந்து கற்களை வீசித் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனையடுத்து, அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் ஓட்டம்பிடித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பல்நாடு பகுதியில் இரவிலும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதேபோல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் இரவிலும் மோதல் நீடித்தது. மாநிலம் முழுவதையும் தீவிரமாக காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.