‘நியூஸ் கிளிக்’ நிறுவனரை விடுவிக்க உத்தரவு

‘நியூஸ் கிளிக்’ நிறுவனரை விடுவிக்க உத்தரவு

2 mins read
556753d0-8882-4bdd-8646-4c7387518138
நியூஸ் கிளிக் உரிமையாளர், ஆசிரியர் பிரபிர் புா்காயஸ்தா. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ‘நியூஸ் கிளிக்’ நிறுவனா் பிரபிர் புா்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 15) அன்று உத்தரவிட்டது.

சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தை பரப்புவதற்கு பணம் பெற்றதாகக் கூறி அவர் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

பிரபிர் தரப்புக்கு விசாரணைக் காவலுக்கான நகலை கைதுக்கு முன்னதாக டெல்லி காவல்துறையினர் வழங்காததால், இந்தக் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு தெரிவித்தது.

டெல்லி காவல்துறை பிரபிரைக் கைது செய்வதற்கு முன்பு அவரது குடும்பத்தினருக்கும், வழக்கறிஞருக்கும் விசாரணைக் காவலின் நகல் மனுவை கொடுக்கவில்லை. இது, சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கூறியது.

நியூஸ் கிளிக் ஆசிரியரான பிரபிர் புர்காயஸ்தாவின் இணையத்தளம் நிதியுதவி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

“இந்த வழக்கில் கைதுக்கான ஆதாரங்களின் நகல் வழங்கப்படவில்லை. எனவே, அவரது கைது செல்லாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் முன்பு அதற்கான ஆதாரங்களின் நகலுடன் எழுத்துபூர்வமாகக் கைது செய்ய வேண்டும் என்று பங்கஜ் பன்சால் வழக்கில் மார்ச் மாதம் அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, பிரபிர் புர்காயஸ்தாவுக்கான ‘ரிமாண்ட்’ உத்தரவு செல்லாது. பிரபிர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறை கைது செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அதே நேரத்தில், அவர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரை விடுவிக்கும்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு பிணை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்