ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்துஸ்தான் காப்பர் லிமிட்டெட் நிறுவனத்திற்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கத்தில், மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாற்றால் 15 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்ற 14 பேரும் மூன்று கட்டங்களாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் மூன்று பேருக்கு மட்டும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் ஜுஞ்சுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (14.5.24) இரவு 8 மணிக்கு நடந்தது.
செவ்வாய்க்கிழமை சுரங்கத்தில் ஆய்வுமேற்கொண்ட அதிகாரிகள், இரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வரமுற்பட்டனர். அப்போது மின்தூக்கியின் ஒரு சங்கிலி அறுந்து விழுந்ததால் மின்தூக்கி சிக்கிக் கொண்டது. இதில் 15 பேர் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்டனர். மின்தூக்கியில் சிக்கியவர்களில் புகைப்படச் செய்தியாளரும் ஒருவர்.
அவர்கள் மீட்கப்படும் வரை சுரங்கத்தின் வெளியேறும் பகுதி வழியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவுபகலாக நடந்த முதல்கட்ட மீட்புப் பணியில் அவர்களில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சியுள்ள 7 பேரை மீட்பதற்கு மீட்புப் பணியினர் கடுமையாகப் போராடினர். சுரங்கத்தில் சிக்கியுள்ள மின்தூக்கியைக் கட்டி இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், ஏணியின் உதவியால் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழந்து விட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல் அமைச்சர் பஜன்லால் ஷர்மா, மீட்புப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளதாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மீட்புப் பணியை வெற்றிகரமாக முடித்த காவல்துறையினருக்கும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.