பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்துக் கொள்வோம்: அமித்ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்துக் கொள்வோம்: அமித்ஷா

2 mins read
11a80949-affc-49dc-89ea-078d81642393
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். - படம்: பிடிஐ இணையம்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்துக் கொள்வோம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

“ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019ஆம் ஆண்டில் நீக்கிய பிறகு காஷ்மீரில் அமைதி திரும்பியிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போது போராட்டத்தைக் காண்கின்றோம்,” என்று அமித்ஷா தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், புதன்கிழமை அன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள செரம்பூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

“முன்னதாக இங்கு அசாதி (Azaadi- சுதந்திரம்) முழக்கத்தை கேட்டோம். தற்போது அதே முழக்கத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறோம். முன்னதாக இங்கே கல் எறிதல் சம்பவங்கள் (ராணுவ வீரர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் மீது) நடைபெற்றன. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறுகிறது.

“மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதால் அதை செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால், இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் எடுப்போம், எடுத்துக் கொள்வோம் என்று நான் சொல்கிறேன்.

“ஊடுருவியவர்கள் அல்லது சிஏஏ (குடியுரிமை சட்டம்) வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். ஜிகாத்திற்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸ்க்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். மம்தா பானர்ஜி சிஏஏவிற்கு எதிராக உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவியவர்களை ஆதரித்து பேரணி மேற்கொள்கிறார்,” என்று பிரசாரத்தில் அமித்ஷா பேசினார்.

தொடர்புடைய செய்திகள்