புதுடெல்லி: இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் 300க்கும் மேற்பட்டோருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது.
முதலில் 14 அகதிகளுக்கு மே 15ஆம் தேதியன்று இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சு கூறியது.
இச்சட்டம் மூலம் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட இணையவாசல் மூலம் அந்த 14 பேரின் குடியுரிமை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை இந்திய உள்துறை அமைச்சின் செயலாளர் அஜெய் பல்லா தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
குறைந்தது 300 பேருக்கு அவர்களது குடியுரிமைச் சான்றிதழ்கள் மே15ஆம் தேதியன்று மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“குடியுரிமைச் சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் இந்திய உள்துறை அமைச்சின் செயலாளர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை அவர் மேற்கோள் காட்டிப் பேசினார்,” என்று இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“நான் இந்தியாவில் 2013ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறேன். இருப்பினும், இப்போதுதான் இந்திய நாட்டவர்களில் நானும் ஒருவன் என உணர்கிறேன். இனி இந்தியா எனது நாடு என்று என்னால் சொல்லிக்கொள்ள முடியும். பயமின்றி நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்,” என்று பாகிஸ்தானின் சிந்து மாநிலத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த 38 வயது சீத்தல் தாஸ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சமானது என்று குரல்கள் எழுப்பப்பட்டிருந்தன.
சமய ரீதியான பாகுபாடு, தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் பாகிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், பௌத்த சமயத்தினர், சமணர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் மூலம் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது.