மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் வியாழக்கிழமை(மே 16) காலமானதாக ‘த இந்து’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
அனிதா கோயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அனிதா வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் அபாத் போன்டா தகவல் வெளியிட்டதாக நாளேடு குறிப்பிட்டது.
கனரா வங்கி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ரூ. 538.62 கோடி பணமோசடி வழக்கில் நரேஷ் கோயல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நரேஷ் கோயலுக்கு மருத்துவ காரணங்களுக்காக இம்மாதம் 6ஆம் தேதி இரண்டு மாத காலத்திற்கு பிணை வழங்கப்பட்டது. நரேஷ் கோயலும் சிறுகுடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மும்பையை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கடப்பிதழும் முடக்கப்பட்டுள்ளது.

