16 உயிர்களைப் பறித்த விளம்பரப் பலகை: தீவிரத் தேடலில் சிக்கிய உரிமையாளர்

16 உயிர்களைப் பறித்த விளம்பரப் பலகை: தீவிரத் தேடலில் சிக்கிய உரிமையாளர்

2 mins read
d06e47d1-8c8c-4090-8368-323fd3bb0961
கைது செய்யப்பட்டு மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்ட பாவேஷ் பிண்டே (நடுவில்). - படம்: இந்திய ஊடகம்

ஜெய்ப்பூர்: மும்பையில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஈகோ மீடியா நிறுவன உரிமையாளர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இம்மாதம் 13ஆம் தேதி மாலை திடீரென வீசிய புழுதிப் புயலில் காட்கோபார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 120 அடி உயர பிரம்மாண்ட விளம்பரப் பலகை அடியோடு சரிந்து விழுந்தது.

அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை மீது அந்தப் பலகை விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தது.

இதனிடையே, ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த ஈகோ மீடியா நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, தலைமறைவான அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் பிண்டேவை மும்பை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். அவர் மீது கொலைக்கு நிகரான வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பதுங்கி இருந்த பாவேஷ் பிண்டேவை வியாழக்கிழமை (மே 16) மும்பை குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநில காவல்துறையினரின் உதவியுடன் கைது நடவடிக்கை நடைபெற்றது.

அவர் உடனே மும்பைக்கு கொண்டு வரப்பட்டு காட்கோபார் பந்த் நகர் காவல்துறையினரிடம் வெள்ளிக்கிழமை (மே 17) காலை ஒப்படைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது தெரிந்ததும் வெறும் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பாவேஷ் தனது காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்