தாராவி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாஜக கூட்டணியில் சிவசேனாவும் (ஏக்நாத் ஷிண்டே) பாஜகவும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தாராவி பகுதிக்கு உள்பட்ட தென்மத்திய மும்பை தொகுதியில் சிவசேனா சார்பாக போட்டியிடும் ராகுல் ஷெவாலேயை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை பிரசாரம் செய்து வருகிறார்.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலையுடன் வியாழக்கிழமை நடிகர் சரத்குமாரும் இணைந்துகொண்டார்.
அன்று மாலை தாராவியில் சரத்குமார் சாலைப் பேரணி நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து மும்பையின் ஒரே தமிழ் எம்எல்ஏவான கேப்டன் தமிழ்செல்வம் சயான் கோலிவாடாவில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சரத்குமாரும் அண்ணாமலையும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சரத்குமார் தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தியில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிரதமர் மோடி தலைமை நாட்டிற்குத் தேவை என்றும் பிரதமரின் சாதனைகள் குறித்தும் சரத்குமார் இந்தியில் சரளமாகப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளின் கலவையில் பேசினார்.
பொதுக்கூட்டம் நடந்த இடம் தமிழர்கள் குறைவாக வசிக்கும் இடம் என்பதால் இருவரும் இந்தியில் பேசியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

