புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுவுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால பிணை வழங்கப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால், தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த விவகாரம் வியாழக்கிழமை (மே 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் துஷாா் மேத்தா, ‘கெஜ்ரிவால் பிணை நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டு வருகிறாா். இது நீதிமன்றத்தின் மீதான தாக்குதலாகும்.
“பிரசாரத்தில் அவா் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசி வருகிறாா். தோ்தலில் மக்கள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக வாக்களித்தால், கெஜ்ரிவால் ஜூன் 2ஆம் தேதி சிறைக்குத் திரும்பமாட்டாா்,” என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “கெஜ்ரிவால் எப்போது சரணடைய வேண்டும் என்ற எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது. தோ்தல் பிரசாரத்தில் இந்த வழக்கு தொடா்பாக எதுவும் பேசக் கூடாது என்று கெஜ்ரிவாலுவுக்கு எந்தவித நிபந்தனையையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை.
“கெஜ்ரிவாலுவுக்கு இடைக்கால பிணை வழங்கியதில் விதிவிலக்கு எதுவும் செய்யப்படவில்லை,” என்றார்.

