மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

1 mins read
95e1d801-0612-4a62-8e1e-4f775c5a5926
ஹரிச்சந்திரபூரைச் சேர்ந்த நயன் ராய், அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் தங்கள் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதைக் கேள்விப்பட்டுக் கதறி அழுகின்றனர் அவர்களது உறவினர்கள். - படம்: இந்திய ஊடகம்

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் மூன்று சிறுவர்கள், ஒரு தம்பதியர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கூடவே மின்னல் வெட்டும் சேர்ந்துகொண்டு தாக்கியதில் வயல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் சிலர் உயிரிழந்தனர்.

சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிலரும் இந்த மின்னல் தாக்குதலுக்கு ஆளாகினர்.

நகர்ப் பகுதிகளைக் காட்டிலும் மால்டா மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. மின்னல் தாக்கியதில் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன்ர். இந்தப் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மின்னல் தாக்குதலில் உயிரிழந்த மால்டா குடும்பத்தினருடன் எனது மனம் ஒன்றி உள்ளது. ந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணைமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

“பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட நிர்வாகம் அயராது உழைத்து வருகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

குறிப்புச் சொற்கள்