இந்திய மக்களவைத் தேர்தலில் பொதுமக்களிடையே வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள சில பள்ளிக்கூடங்கள் மதிப்பெண்களையும் ரொக்கப் பணத்தையும் வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளன.
அந்த மாநிலத்தில் மே 21ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்களிப்பின்போது தனது மாணவர்களின் பெற்றோர் வாக்களித்தால் அந்த மாணவர்களுக்கு 10 மதிப்பெண்களை கூடுதலாக வழங்க இருப்பதாக லக்னோவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி அறிவித்து உள்ளது.
அதேபோல தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் தனது அலுவலர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க இருப்பதாகவும் செயின்ட் ஜோசப் கல்வி நிலையங்களின் குழுமம் தெரிவித்து உள்ளது.
10 மதிப்பெண்கள் ஒரே பாடத்திற்கு மொத்தமாக அல்லது வெவ்வேறு பாடங்களுக்குப் பிரித்து வழங்கப்படும் என்று அந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
லக்னோ மக்களவைத் தேர்தல் வாக்களிப்பை ஊக்குவிக்க எங்கள் குழுமத்திற்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் இந்தச் சலுகைகளை வழங்குகிறோம் என்றார் அவர்.
மக்களவைத் தேர்தலில் சில மாநிலங்களில் மிகவும் குறைவான மக்களே வாக்களிக்கின்றனர். குறிப்பாக, நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற மகாராஷ்டிர மாநிலத்தில் ஏறக்குறைய 53 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. ஆகக் குறைவாக, ஷிருர் மக்களவைத் தொகுதியில் 43.89% வாக்குகள் பதிவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது, அந்தத் தொகுதியில் உள்ளோரில் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கச் செல்லவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அதனால் வாக்களிப்பை ஊக்குவிக்க இதுபோன்ற அறிவிப்புகளை தனியார் நிறுவனங்களும் தேர்தல் ஆணையமும் செய்து வருகின்றன.
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றபோது வாக்களிப்பதை ஊக்குவிக்க பல்வேறு வணிக நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்தன.
வாக்களித்தற்கான அடையாளத்தைக் காட்டினால் தோசை, குளிர்பானம் ஆகியவற்றை சில ஹோட்டல்கள் இலவசமாக வழங்கின. ஐயங்கார் ஃபிரஷ் பேக்கரி தமது கடையில் வாங்கும் பொருள்களை வாக்களித்தவர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடியில் வழங்கியது.