மின்சாரம் தாக்கி மூச்சின்றி கிடந்த சிறுவன்; சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரூட்டிய மருத்துவர்

மின்சாரம் தாக்கி மூச்சின்றி கிடந்த சிறுவன்; சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரூட்டிய மருத்துவர்

1 mins read
776d1000-69a0-4a70-9f97-8314374b2f19
ஆறு வயது சிறுவனின் இதயம் மீது கைவைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர். தற்போது நலமுடன் உள்ள சிறுவன் சாயி. - படம்: இந்திய ஊடகம்

விஜயவாடா: ஆந்திராவில் மின்சாரம் தாக்கி சாலையில் தூக்கிவீசப்பட்ட சாயி என்ற சிறுவனின் இதயத் துடிப்பை பெண் மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்க சமயத்தில் கடவுள்போல் வந்து சிறுவனைக் காப்பாற்றியதாக அங்குள்ள மக்கள் பெண் மருத்துவரைப் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா, ஐயப்பா நகரில் தெருவில் இருந்த மின் கம்பத்தைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான் சாயி. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டான்.

இதயத்துடிப்பு நின்று சாலையில் மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்த சிறுவனைக் கண்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர். பெருங்கூட்டமும் கூடியது.

அப்போது அவ்வழியாக வந்த பெண் மருத்துவர் ரவாளி, சிறுவனின் இதயத்துடிப்பு நின்றுபோனதை சோதித்து சிறுவனுக்குச் சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுவனின் உடலில் அசைவு தென்பட்டது.

இதைத்தொடர்ந்து, உடனடியாக அவசர சிகிச்சை வாகனத்தில் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். சிறுவன் இப்போது வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளான்.

சிறுவனின் இதயம் மீது பெண் மருத்துவர் தனது கையை வைத்து அழுத்தி உயிரைக் காப்பாற்றுவதைக் கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்