புதுடெல்லி: புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் தனி உதவியாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்தது.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலிவால் அளித்த புகாரின் தொடர்பில் இரண்டு நாள் கழித்து காவல்துறை பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்தது.
மே 13ஆம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றபோது பிபவ் குமார் தம்மை பல முறை கன்னத்தில் அறைந்ததாகவும் மார்பிலும் வயிற்றிலும் மாறி மாறி எட்டி உதைத்ததாகவும் மாலிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் ஸ்வாதி மாலிவால் டெல்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளித்தாா் என்று அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே கடந்த மே 13ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கச் சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியா்களுடன் ஸ்வாதி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடும் 52 வினாடிகள் காணொளி வெளியாகியுள்ளது.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சுவாதி மாலிவாலுக்கு எதிராக சிவில் லைன் பகுதிக்கு உட்பட்ட காவல்துறையிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் முன் அனுமதி பெறாமல், அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன் தகாத வார்த்தைகளால், மிரட்டல் விடும் வகையில் மாலிவால் பேசினார் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
முதல்வரைச் சந்திப்பதற்கான முன்அனுமதியை பெற்று வரும்படி மாலிவாலிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டார். முதல்வரின் பாதுகாப்பு பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார் என்றும் ஒழுங்குமுறைகளை மீறி நடந்து கொண்டார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருடைய நோக்கங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளன. மதிப்பு வாய்ந்த முதல்வருக்கு, தீங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது செயல் உள்ளது என்றும் பிபவ்குமார் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு நிலவரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆம் ஆத்மி எம்.பி.ஸ்வாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வாதி மாலிவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். இந்தச் சோதனையில் மாலிவாலின் இடது காலில் 3 செ.மீ அளவுக்கும், வலது கன்னத்தில் 2 செ.மீ அளவுக்கு அடித்த காயங்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.

