பெங்களூரு: கர்நாடகா மாநிலம், ஹசன் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த காணொளிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியையும் சிக்கவைக்க, தனக்கு ரூ.100 கோடி தருவதாக இப்போதைய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேரம் பேசியதாக வழக்கறிஞரும் பாஜக தலைவருமான ஜி.தேவராஜே கவுடா பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணாவும் உடந்தையாக இருந்ததாக புகார்கள் பதிவாகின. முன்னாள் பணிப்பெண்ணைக் கடத்திய வழக்கில் அண்மையில் எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன்னைப் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள் கசிய ஆரம்பித்ததும், வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் பிரஜ்வல் ரேவண்ணா. அவரைக் கைது செய்ய கர்நாடக மாநிலக் காவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பாலியல் விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பா எச்.டி.குமாரசாமியையும் சிக்கவைக்க துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ரூ.100 கோடி தருவதாக தன்னிடம் பேரம் பேசியதாக வழக்கறிஞர் ஜி.தேவராஜே கவுடா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இவ்வழக்கின் பின்னணியில் எச்.டி.குமாரசாமியும் இருப்பதுபோல் வெளிக்காட்ட ரூ.100 கோடி வழங்க முன்வந்தார் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்.
“அமைச்சர்களான என். சாளுவராயசுவாமி, கிருஷ்ணா பைரே கவுடா, பிரியங்க் கார்கே, மற்றொரு அமைச்சர் ஆகியோர் இந்தப் பேரத்தைப் பேசினர்.
“அவர்கள் ‘பவ்ரிங் கிளப்’க்கு ஏற்கெனவே ரூ.5 கோடி முன்தொகையையும் அனுப்பிவிட்டனர். ஆனால், நான் அவர்களது சதி வலைக்கு சம்மதிக்காததால் அவர்கள் என்னை சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
“டி.கே.சிவக்குமார்தான் பிரஜ்வலின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக்கிடமிருந்து அனைத்து தகவல்களையும் கொண்ட பென் டிரைவை தயார் செய்தார்.
“இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நான்குபேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்தனர். நான் அவர்களது திட்டத்துக்கு உடன்படவில்லை. அவர்கள் பாஜக, நரேந்திர மோடி, எச்.டி.குமாரசாமிக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டனர்.
“அவர்கள் என் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்கை பதிவு செய்தனர். இப்போது என்னை பென் டிரைவ் வழக்கில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகின்றனர்,” என்று ஜி. தேவராஜே கவுடா கூறியுள்ளார்.