புதுடெல்லி: ஐந்தாம் கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் (மே 18) நிறைவடைந்தது.
இந்த ஐந்தாம் கட்டத்தின் நட்சத்திர வேட்பாளர்களாக ரேபரேலியில் ராகுல் காந்தியும் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் லக்னோவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பீகாரில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவும் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை திங்கட்கிழமை (மே 20) நடைபெற உள்ளது.
பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இத்தேர்தல் மூலம் மூன்றாம் முறையாக மோடி தலைமையில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாஜக கூட்டணியும் அதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் களம் இறங்கியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பல்வேறு இடங்களிலும் அனல் பரக்கப் பிரசாரம் செய்த நிலையில், ஐந்தாம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது.
ஒட்டுமொத்த வாக்குகளும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.