குருகிராம்: ஹரியாணா மாநிலத்தில் நூ வட்டம் டவுரு என்ற இடத்துக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து சனிக்கிழமை (மே 18) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் எட்டுப் பேர் உயிரோடு எரிந்து மாண்டனர்.
இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு தனியார் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தனர்.
மதுரா-பிருந்தாவனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹரியானா குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள், பேருந்தை துரத்திச் சென்று ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
பேருந்தில் தீ மளமளவென பரவியதில் பேருந்தில் இருந்தவர்களில் எட்டுப் பேர் கருகி மாண்டனர்
இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.