திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாட வெளிநாடு சென்று திரும்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆளும் கட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பேரணியாகச் சென்ற இளைஞர் காங்கிரசார், பினராயி விஜயன் வீட்டின் அருகில் அவரது உருவ பொம்மையையும் எரியூட்டினர்.
இம்மாதம் 6ஆம் தேதி திடீரென வெளிநாடு புறப்பட்டுச் சென்ற முதல்வர் பினராயி விஜயனுடன் அவரது மனைவி கமலா விஜயனும் பேரனும் உடன் சென்றனர். பினராயி விஜயன் எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறார்? எதற்காகச் செல்கிறார்? எப்போது திரும்பி வருவார்? என்ற எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், 19ஆம் தேதி கேரளா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே துபாயிலிருந்து அவர் திருவனந்தபுரம் திரும்பினார்.

