புதுடெல்லி: பிரதமர் மோடி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய கட்சியாக உருமாறும் என்று கூறியுள்ளார்.
தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவும் வரவேற்பும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
ஆனால் இம்முறை அப்படியல்ல. தென் மாநிலங்களில் பெரிய கட்சியாக பாஜக மாறும் என்று திரு மோடி தெரிவித்துள்ளதாக தினத்தந்தி தகவல் தெரிவிக்கிறது.
“தென்மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளை வெல்லும். தென்னிந்தியாவில் நாங்கள் (பாஜக) தனிப்பெரும் கட்சியாக இருப்போம், மேலும் கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
“பாஜகவிற்கு மக்களிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது. இது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தூக்கமில்லாத இரவை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை அனைத்துப் பகுதிகளிலும் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றிகளைப் பெறுவோம். குறிப்பாக தெற்கிலும், கிழக்கிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பாஜக, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியல்ல என்றும் அவர் விளக்கினார்.
“நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக இதுவரை நான் ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஒருநாளும் செயல்பட்டதில்லை. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் நடந்து கொண்டது இல்லை.
“நாட்டு மக்களில் யாரையும் நான் சிறப்பு மக்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். அதை இப்படி திரித்து சொல்கிறார்கள். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் அம்பேத்கர், நேரு, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை எனக் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிக்கு சிறுபான்மை இன மக்கள் பலியாகி விடக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
“பாஜகவை பிராமணர்கள் கட்சி என்று சொன்னார்கள். ஆனால் பாரதிய ஜனதாவில் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணியை பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். நூறு வயதான எனது தாயார் தனது கடைசி நாள்களை அரசு மருத்துவமனையில்தான் கழித்தார். தவறான நோக்கத்துடன் எந்த முடிவையும் நான் எடுப்பதில்லை,” என்றார் அவர்.
பாஜக தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

