தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

2 mins read
56748eb7-aaab-4c99-bf76-9d9857c42b4f
கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கைக் குடிமகன்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் படையினர் திங்கட்கிழமை (மே 20) நான்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளைக் கைது செய்ததாக தொலைக்காட்சி செய்திகள் கூறின.

அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த நான்கு பயங்கரவாதிகளும் சுற்றி வளைக்கப்பட்டதாக அந்தச் செய்திகள் கூறின.

அந்த நால்வரும் இலங்கைக் குடிமகன்கள் என்பதும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

சந்தேகத்துக்குரிய அந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் தகவலுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தபோது அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் குறிப்பிட்டன.

கைது சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக அந்த நால்வரையும் பெயர் குறிப்பிடப்படாத இடம் ஒன்றுக்கு குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அழைத்துச் சென்றதாக ‘டிவி9 குஜராத்தி’ என்னும் தொலைக்காட்சி தெரிவித்தது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்ததற்கான காரணமும் அவர்கள் என்ன செய்யக் காத்திருந்தார்கள் என்ற விவரமும் தெளிவாகத் தெரியவில்லை என்றது அச்செய்தி.

மூன்று ஐபிஎல் குழுக்கள் அகமதாபாத் விமான நிலையம் வந்து சேர வேண்டிய நிலையில் அங்கு இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் அனைத்துலக எல்லை அருகே கடந்த மார்ச் மாதம் இரண்டு உயர்மட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பங்ளாதேஷில் இருந்து அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வேளையில் அதிகாரிகளிடம் அவர்கள் பிடிபட்டனர்.

அவ்விருவரில் ஒருவர் உத்தராகண்டைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ஹரியானாவின் பானிபட் நகரைச் சேர்ந்தவர் என்றும் அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்புச் சொற்கள்