கட்டுரை எழுது: போர்ஷே காரை ஓட்டி விபத்தில் இருவரைக் கொன்ற சிறாருக்கு நிபந்தனை பிணை

கட்டுரை எழுது: போர்ஷே காரை ஓட்டி விபத்தில் இருவரைக் கொன்ற சிறாருக்கு நிபந்தனை பிணை

2 mins read
93466c7e-6916-4aa1-adbc-ac0e623d9501
விபத்துக்குப் பிறகு பதின்ம வயது இளையரை கூட்டத்தினர் அடித்து இழுத்துச் சென்றனர். - படம்: இண்டியா டுடே இணையம்

புனே: இந்தியாவின் புனே நகரில் போர்ஷே காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் இருவரை நசுக்கிக் கொன்ற பதின்ம வயது இளையருக்கு பிணை வழங்கும்போது நீதிமன்றம் விநோதமான நிபந்தனைகளை விதித்துள்ளது.

அந்த 17 வயது இளையரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கோரிகான் பார்க்கில் விபத்து நிகழ்ந்தது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் உயிரிழந்தனர்.

சிறார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இளையருக்கு பிணை வழங்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த 14 மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை தடுப்புக் காவலில் வைத்தனர்.

பின்னர் சிறார் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் பல்வேறு நிபந்தனைகளை அது விதித்தது. அவற்றில் ஒன்று கட்டுரை எழுதுவது. சாலை விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி 300 வார்த்தைகளுக்கு கட்டுரை எழுத வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளைப் படிக்க வேண்டும். அது பற்றி சிறார் நீதிமன்றத்திடம் விளக்க வேண்டும் என்பதும் இதர சில நிபந்தனைகள்.

காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி அஷ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அனிஸ் டுதியா படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இறந்தார்.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் அந்த இளையர் ஓட்டிய கார் கூட்டத்தில் புகுந்து ஓடியது. காரில் மூன்று பேர் இருந்ததாக ‘இண்டியா டுடே’ யிடம் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

விபத்து நிகழ்ந்த உடனே ஒருவர் ஓடி விட்டதாகவும் இளையர்கள் மது குடித்திருந்ததாகவும் சிலர் கூறினர்.

யெரவாடா காவல் நிலையம் ஓட்டுநருக்கு எதிராக கவனக்குறைவாக காரை ஓட்டியது, கண்மூடித்தனமாக காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இளையரின் தந்தை மீதும் சிறாருக்கு மது பானங்களை விற்ற மதுக்கூடத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புனே நகர காவல்துறை ஆணையர் அமிடேஷ் குமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவிபத்து