தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

250 ஜோடி உடைகள் வைத்திருந்தேன் என்பதே மிகப்பெரும் குற்றச்சாட்டு: பிரதமர் மோடி

2 mins read
e1fa0059-fb0e-471d-976e-b18765bb8703
விதவிதமான ஆடைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் தனது கட்சி சின்னமான தாமரை மலரும் என்று கூறிவரும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆடை தொடர்பாக எதிர்க்கட்சியினரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனது அரசியல் வாழ்க்கையில் நான் 250 ஜோடி ஆடைகளை வைத்திருந்ததாக எதிர்க்கட்சிகள் என்மீது சுமத்திய பழியே நான் எதிர்கொண்ட மிகப் பெரிய குற்றச்சாட்டு,” எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் குஜராத் முன்னாள் முதல்வருமான அமர்சிங் சவுத்ரி தன்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததையும் பின்னொரு பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பாகத் தான் பதிலளித்தது குறித்தும் பிரதமர் மோடி விளக்கினார்.

சவுத்ரியின் குற்றச்சாட்டு தொடர்பில், “ரூ.250 கோடி கொள்ளையடித்தவர் வேண்டுமா அல்லது 250 ஜோடி உடைகள் வைத்திருப்பவர் வேண்டுமா என்று நான் மக்களிடம் கேட்டேன். 250 ஜோடி ஆடைகள் வைத்திருக்கும் முதல்வரை குஜராத் மக்கள் பின்னர் தேர்வு செய்தனர்,” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், “எண் கணிதத்தில் சவுத்ரி பிசகிவிட்டதாகவும் தன்னிடம் இருக்கும் உடைகளின் எண்ணிக்கை 250 அல்ல; 25 அல்லது 50ஆக இருந்திருக்கலாம்,” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்துவரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்திலும்கூட ரூ1.6 லட்சம் ஊதியம் பெறும் பிரதமர் மோடி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் அணிவதன் பின்னணி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வருகை மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்தந்த மாநிலங்களின் கலாசார ஆடைகளை அணிந்து வந்து பொதுமக்களை வசீகரிப்பார்.

அதேபோல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போதும் மிடுக்கான ஆடைகளைத் தேர்வு செய்து உடுத்துவதில் அலாதி ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது, பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைகளைப் பிரதமர் மோடி அணிவதாகவும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

குறிப்புச் சொற்கள்