தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகிக்கும் வெயில்: பள்ளிகளை மூடும்படி இந்திய அதிகாரிகள் உத்தரவு

2 mins read
47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; நான்கு மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
8163bf36-f600-4aea-8f0d-037e59b21038
கோடை விடுமுறைக்கு முன்னதாகவே பள்ளிகளை மூடுமாறு தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: டெல்லியில் 47.4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை அதிகரித்ததை அடுத்து, கோடை விடுமுறைக்கு முன்னதாகவே பள்ளிகளை மூடுமாறு தலைநகரில் உள்ள இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் உத்தரவுப்படி வேர்க்குரு, தோலில் வெடிப்பை ஏற்படுத்தும் வெப்பம் காரணமாக பள்ளிகளை மூடுவது உடனடியாக நடப்புக்கு வருவதாக டெல்லி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரம் கடுமையான வெப்பநிலை நிலவும் என இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 20ஆம் தேதியன்று டெல்லியின் நஜாப்கர் புறநகரில் 47.4 டிகிரி செல்சியசாக இந்த வெப்பம் உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ ஊடகச் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் இந்தியாவுக்கு புதிதல்ல. ஆனால், பல ஆண்டுகால அறிவியல் ஆராய்ச்சிகள் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை பாதிப்புகள் தீவிரமாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக கைக்குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களின் உடல்நிலையில் கவனமாக இருக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மே 2022ல் டெல்லியின் சில பகுதிகள் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியதாக அந்த நேரத்தில் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலின் அடுத்த சுற்று வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

ஒவ்வொரு சுற்று வாக்குப்பதிவுக்கு முன்பும் வெப்பம், ஈரப்பதத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.

அதே நேரத்தில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

டெல்லியில் இந்திய வரலாற்றிலேயே மிக அதிகமான வெப்பநிலை (47.4 டிகிரி செல்சியஸ்) பதிவானதாகக் கூறப்படும் நிலையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

வியாழக்கிழமையன்று (மே 23) உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளிலும் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இரு தினங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் அவசர கால மீட்புக் குழுவினரைத் தயார் நிலையில் இருக்கும்படி கேரள அரசு அறிவுறுத்தி இருந்தது.

குறிப்புச் சொற்கள்