பெங்களூரு: பாலியல் வன்கொடுமை, ஆபாசக் காணொளி வழக்கில் சிக்கியுள்ள தேவகவுடாவின் பேரனும் மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை, “இனியும் ஓடி ஒளிய வேண்டாம், திரும்பி வந்து சரணடையவும்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி.
செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி அல்லது வேறு எந்த நாட்டில் இருந்தாலும் திரும்பி வருமாறு ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
“எதற்கும் பயப்பட வேண்டாம். இந்நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது. எவ்வளவு காலம்தான் ஓடி ஒளிய முடியும். பிரஜ்வலுக்கு உண்மையிலேயே என்மீதும், அவரின் தாத்தா மீதும் மரியாதை இருந்தால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவுக்குத் திரும்பி காவலர்களிடம் சரணடைய வேண்டும்,” என்றார்.
“இந்த விவகாரம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் பிரஜ்வல் ரேவண்ணாவை நாட்டை விட்டு வெளியேற விட்டிருக்க மாட்டேன். இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு அருவருக்கத்தக்க வழக்கு. நம் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

