புதுடெல்லி: கொழுப்பு, உப்பு, சர்க்கரை உட்கொள்வதை குறைக்குமாறு இந்தியா தனது குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மே 7ஆம் தேதியன்று இந்தியர்களிடையே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைக் குறைக்க 17 உணவு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்தியர்களின் உணவுப் பழக்கம் பெரும்பாலும் ஆரோக்கியத்தைவிட சுவைக்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.
முக்கிய ஆலோசனைகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்வது, உடனடி நூடல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது ஆகியவை அடங்கும்.
தங்களது உணவுத் தெரிவுகளைத் தரமானதாக பயன்படுத்த உணவில் ஒட்டப்பட்டுள்ள ஒட்டுவில்லைகளைக் கவனமாகப் படிக்குமாறு இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள் போன்ற சேர்க்கைகளைக் கொண்ட புரதச் சத்து பொடிகளிலிருந்து விலகி இருக்கும்படியும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, குறைவான எண்ணெய் தேவை, ஊட்டச்சத்துகளைப் பாதுகாக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக களிமண் சட்டிகள் சமைக்க மிகவும் பயனுள்ள பாத்திரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வந்த திருத்தப்பட்ட வழிகாட்டி குறிப்புகள் இந்தியாவில் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
2023 ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையின்படி, 74.1 விழுக்காடு இந்தியர்களால் 2021ல் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை.
இந்தியாவின் மொத்த நோய் பாதிப்பில் ஏறக்குறைய 56.4 விழுக்காட்டுக்கு ஆரோக்கியமற்ற உணவு வகைகளே காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
2019-2021 காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில், நான்கில் ஒரு இந்தியர் அதிக எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.