அகமதாபாத்: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காகக் காத்திருந்தோம் என்று குஜராத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்துக்கு இம்மாதம் 12ஆம் தேதி மின் அஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து ஆமதாபாத் உட்பட குஜராத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அண்டை நாடான இலங்கையில் இருந்து மே 20ஆம் தேதி சென்னை வழியாக அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்த நான்கு சந்தேக நபர்களை காவல்துறை விசாரித்தது.
இவர்கள் இலங்கையைச் சேர்ந்த முஹமது நுஸ்ரத், 33, முஹமது பரிஸ், 35, முஹமது நப்ரான், 27, முஹமது ரஸ்தீன், 43, என்பது தெரிய வந்தது.
இவர்கள், அனைத்துலக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், பாகிஸ்தானில் உள்ள அபு பக்கர் என்ற பயங்கரவாதியின் உத்தரவுப்படி, சில சதித்திட்டங்களை தீட்ட ஆமதாபாதுக்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, பாகிஸ்தான் தயாரிப்பு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், ஐ.எஸ்., அமைப்பின் கொடிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இவர்கள் மீது ‘உபா’ எனும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களைத் தொடர்ந்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் மிகப்பெரிய நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கைதான பயங்கரவாதிகள் வாக்குமூலம் அளித்தனர்.
எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பதை கூற அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

