புதுடெல்லி: இந்தியாவில் உருமாறிய கேபி.1, கேபி.2 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளதற்கு இந்த இரு கிருமிகள் காரணமாக இருக்கின்றன.
ஏறக்குறைய 290 கேபி.2 சம்பவங்களும் 34 கேபி.1 சம்பவங்களும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சார்ஸ்-கொவ்-2 கூட்டமைப்பு தொகுத்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏழு மாநிலங்கள் முழுவதும் கேபி.1 சம்பவங்களும் யூனியன் பிரதேசங்களில் 23 கேபி.2 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இருந்தாலும் இவை அனைத்தும் ஜேஎன்1 என்ற கிருமியிலிருந்து உருவான மாற்று வகை கிருமி என்று மத்திய சுகாதார அமைச்சின் வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்தது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிக்கவில்லை என்றும் தீவிரப் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றும் அவ்வட்டாரம் குறிப்பிட்டது.
“எனவே கவலை, பதற்றம் அடைவதற்கான காரணம் எதுவும் இல்லை. அதிவேகமாக கிருமிகள் உருமாறுகின்றன. இது, ‘சார்ஸ்-கொவ்2’ போன்ற கிருமிகளின் இயல்பான மாற்றமே,” என்று மத்திய சுகாதாரத் துறை வட்டாரம் கூறியது.
நோயின் தீவிரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டறிய மருத்துவமனைக் கட்டமைப்பிலிருந்து மாதிரிகள் எடுக்கப்படுவதாகவும் அது கூறியது.
கோவா, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகியவை புதிய கிருமிப் பாதிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்ட இதர மாநிலங்கள் ஆகும். மகாராஷ்டிராவில் மட்டும் ஆக அதிக கேபி.2 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 அலை ஏற்பட்டுள்ளது. மே 5ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி வரை 25,900க்கும் மேற்பட்ட கொவிட்-19 சம்பவங்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
இவற்றில் கேபி.1. கேபி.1 மட்டும் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கின்றன என்று த இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

