மும்பை: ஃபிளமிங்கோ பறவைகள் கூட்டம் மோதிய பிறகு எமிரேட்ஸ் விமானம் மே 20ஆம் தேதி பின்னேரத்தில் பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதில் விமானத்துக்குச் சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் பல பறவைகள் கொல்லப்பட்டன.
இந்தச் சம்பவத்தை எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் மே 22ஆம் தேதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார்.
துபாயிலிருந்து மும்பைக்குச் சென்ற ‘இகே508’ விமானம் தரையிறங்குவதற்கு முன்பு பறவைகள் மோதியதாக அவர் கூறியதை டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு மேற்கோள் காட்டியிருந்தது.
போயிங் 777 ரக அந்த விமானம் மும்பையை நெருங்கியபோது தரையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் வேகமாக பறந்து வந்த ஃபிளமிங்கோ பறவைகள் மோதின. 39 பறவைகள் இதில் மாண்டன.
“விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்,” என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
ஏராளமான பறவைகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
எமிரேட்ஸ் விமானத்துக்குச் சேதம் ஏற்பட்டதால் அன்று மும்பையிலிருந்து துபாய்க்குத் திரும்பும் சேவை மே 20ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

