புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை தமிழர் ஆள வேண்டுமா என பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் வி.கே. பாண்டியனைக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒடிசாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான அவர் பேசினார்.
சட்டமன்றத் தேர்தல் ஒடிசாவின் பெருமைக்காக நடக்கிறது. ஒடிசாவின் கலாசாரத்தையும், சுயமரியாதையையும் நவீன் பட்நாயக் நெரித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்
“பிஜு ஜனதா தள ஆட்சியில் ஒடிசா 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. 25 லட்சம் மக்களுக்கு தற்போதும் வீடு, குடிநீர் வசதி இல்லை. ஒடிசாவை தமிழ் மொழி பேசுபவர் ஆளவேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆளவேண்டுமா?.” என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
சில நாள்களுக்கு முன்பு ஒடிசாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும் இதே போன்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
அதோடு பூரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் என்றும் பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான வி.கே.பாண்டியனைத்தான் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த வி.கே. பாண்டியன், அளவற்ற அறிவாற்றலைப் பெற்றுள்ள பிரதமா் மோடி புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவரிடம் உள்ள எண்ணற்ற அதிகாரிகள் மூலமாக இந்தப் பணியை அவா் செய்தாக வேண்டும். பிரதமரின் அறிவாற்றல் ஒடிஸா மக்களின் வாழ்வு ஒளிமயமாக உதவட்டும்,” என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“கோயில் அறையின் சாவிகள் தொலைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில், பத்தாண்டுக் காலமாக கூட்டணி ஆட்சியின்போது பாஜக அமைச்சா்கள் இந்த விவகாரத்தைக் கையாண்டுள்ளனா். எனவே, தொலைந்த சாவிகளை பாஜக தலைவா்கள்கூட கண்டுபிடித்துக் கொடுக்கலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

