பெங்களூரு உணவகக் குண்டுவெடிப்பு: நான்கு மாநிலங்களில் சோதனை

2 mins read
7c9f1f72-9248-4e27-9702-50541931b855
பெங்களூரு உணவகம். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: பெங்களூரு உணவகக் குண்டுவெடிப்பு தொடர்பில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அதிகாரிகள், நான்கு மாநிலங்களில் 11 இடங்களில் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு ஒயிட்பீல்ட் சாலையில் கம்மணஹள்ளி என்ற பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ‘கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இருமுறை குண்டு வெடித்தது. இதில், ஒன்பது பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தாகா, முசாவீர் ஹுசைன் சாஜிப் ஆகியோரை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் பலரது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகாவில் பெங்களூரு, ஹூப்லி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், ஹூப்ளி கசபா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சோயாப் மீர்ஜா, அஜிஜ் அஹமத் மீர்ஜா ஆகியோரை விசாரித்தனர். இதையடுத்து கர்நாடகாவில் இருந்து ஐந்து பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு கோவை சென்றது.

கோவையில் சாய்பாபா காலனி மற்றும் நாராயண குருசாமி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களான ஜாபர் இக்பால் (39), நயீம் சித்திக் (36) ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில், வீட்டில் இருந்த கணினி, கைப்பேசி ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இந்தச் சோதனை நடந்ததாகத் தெரிகிறது. சோதனைக்குள்ளான இரு மருத்துவர்களும், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூரு காவல்துறை 2012ல் நடத்திய விசாரணையில் இந்த இரு மருத்துவர்களும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்