புனே: இருவர் உயிரிழக்கக் காரணமான இளையருக்கு வழங்கப்பட்ட பிணையைச் சிறார் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தியாவின் புனே நகரில் 17 வயது இளையர் குடிபோதையில் ‘போர்ஷே’ காரை அதிவேகமாக ஓட்டி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் இருவர் மாண்டதாக மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
இந்த விபத்து மே 19ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
குற்றம் புரிந்ததாக நம்பப்படும் அந்த இளையர் வயது குறைந்தவர் என்ற காரணத்தினால் அவர் சிறார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 15 நாள்களுக்குச் சமூக சேவையாற்ற வேண்டும் என்று சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாலைப் பாதுகாப்பு குறித்து கட்டுரை எழுதுமாறும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக திரு ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
இருவர் உயிரைப் பறித்த குற்றத்துக்கு வெறும் கட்டுரை எழுதச் சொல்வது நியாயமற்றது என்று மகாராஷ்டிர மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிறார் நீதிமன்றம் எடுத்த முடிவு தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகத் திரு ஃபட்னாவிஸ் கூறினார்.
அந்த இளையர் செய்தது மிகவும் மோசமான குற்றம் என்றார் அவர்.
குற்றம் மோசமானதாக இருந்தால் 16 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு எதிராக பெரியவர்களைப் போல வழக்கு விசாரணை நடத்த 2015ஆம் ஆண்டில் இந்தியச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை திரு ஃபட்னாவிஸ் சுட்டினார்.
இந்த வழக்கு தொடர்பாக புனே காவல்துறை விசாரணை நடத்துவதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட இளையருக்குப் பிணை வழங்கியது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை சிறார் நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அந்த இளையருக்கு வழங்கப்பட்ட பிணையைச் சிறார் நீதிமன்றம் புதன்கிழமை (மே 22) ரத்து செய்தது. அத்துடன், ஜூன் 5ஆம் தேதிவரை அவரைச் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டது.

