புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய பிரசாரங்களை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகhg தெரிவித்துள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1ஆம் தேதி 7ஆவது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டஅனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நட்சத்திர பேச்சாளர்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் சர்ச்சையான கருத்துகளைப் பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது. சாதி, மதம் தொடர்பாக வெறுப்பை தூண்டும் கருத்துகளை பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, மதம், இனம் சார்ந்த பிரசாரங்களை எந்தக் கட்சியும், எந்த பேச்சாளர்களும் இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை (மே 22) அறிவுரை வழங்கியுள்ளது.
‘இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டுவிடும்’ என்பதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம். இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை எந்தக் கட்சியும் தெரிவிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.