லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூரின் அசோக் நகரில் திங்கட்கிழமை (மே 20) நடந்த திருமணத்தின்போது மணமகன் மணமகளை முத்தமிட்டதால் இரு குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மணமகனின் செயலால் ஆத்திரமடைந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேடையில் ஏறி, தடியடி நடத்தி மணமகன் வீட்டாரை அடித்து உதைத்தனர். இந்த மோதலில் மணமகளின் தந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
இரு குடும்பத்தினரையும் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
திங்கட்கிழமை இரவு மணப்பெண்ணின் தந்தை தனது இரு மகள்களின் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதல் திருமணம் எந்த பிரச்சனையும் இன்றி நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது திருமணம் கைகலப்பில் முடிந்துள்ளது.