புதுடெல்லி: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் வெயிலின் பாதிப்பால் ஒன்பது பேர் உயிரிழந்ததாக மே 24ஆம் தேதி வெளியான ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள வேளையில், வெப்ப நிலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நாட்டின் வடக்குப் பகுதியில் வெப்பம் வாட்டி எடுக்கும் நிலையில், தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை (மே 25), மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர்.
சனிக்கிழமை வெப்பநிலை கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மே மாதம் வெப்பநிலை அதிகரிப்பது வழக்கம் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலான வெப்ப அலைகள் வீசுமென்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ராஜஸ்தானில் மாண்டோர், வெப்பத் தாக்கம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இருப்பினும் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று மாநிலப் பேரிடர் நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் ராய்ட்டர்சிடம் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் நகரில் வியாழக்கிழமை (மே 23), வெப்பநிலை 48.8 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலைகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

