கேரளாவில் ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கேரளாவில் ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1 mins read
b7c0f6d8-dbe3-4754-823f-c5bbfc5efe6e
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி நகரில் உள்ள திருப்புனிதுரா காந்தி சதுக்கம் பகுதியில் சாலைகளைச் சூழ்ந்த மழைநீர்.  - படம்: திஇந்து

திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதையடுத்து அங்கு பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குள் மழைநீர் புகுந்த‌தால், நோயாளிகள் மருத்துவமனையின் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கேரளாவின் சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலில் பெரும் அலைகள் எழும் என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று மீனவர்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்