ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட இளையர்கள் விசாகப்பட்டினம் திரும்பினர்

2 mins read
437c7fad-9f2b-486d-9fda-ec0c563110dd
கம்போடியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கொடுமைப்படுத்தப்பட்ட ஆந்திர மாநில இளையர்கள் 25 பேர் பத்திரமாக விசாகப்பட்டினம் திரும்பினர். - படம்: எக்ஸ் தளம்

விசாகப்பட்டினம்: கம்போடியாவில் ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கிய 5,000 இந்திய நாட்டு இளையர்களில் 150 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 25 பேர் மே 24ஆம் தேதியன்று விசாகப்பட்டினம் திரும்பினர்.

அவர்களை வரவேற்க விசாகப்பட்டினத்தின் காவல்துறை ஆணையர் ரவி சங்கர் ஐயனார் அந்நகரின் விமான நிலையத்திற்கு நேரில் சென்றார்.

பாதிக்கப்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்தோரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஆணையர் ரவி சங்கர் கூறினார்.

விசாகப்பட்டினத்தில் மட்டுமே ஆட்கடத்தல் கும்பலுக்கு உதவும் கிட்டத்தட்ட 70 முகவர்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

முகவர்கள், கடப்பிதழ்கள், வங்கிப் பரிவர்த்தனைகள், குடிநுழைவுத் துறை, கைப்பேசி அழைப்புகள், மின்னஞ்சல் பதிவுகள் ஆகியவற்றில் ஆந்திரக் காவல்துறை கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இளையர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக ஆணையர் ரவி சங்கர் தெரிவித்தார். ஆட்கடத்தல் கும்பல் அந்த இளையர்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டதாகவும் அவர்களை இருட்டறையில் பூட்டி பேஸ்பால் மட்டைகளால் அடித்துத் துன்புறுத்தியதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் வேலை தேடித் தருவதாகப் பொய் கூறி இந்திய இளையர்கள் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்கள் கம்போடியாவுக்குக் கடத்தப்பட்டனர்.

அங்கு அவர்களை ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடித்துத் துன்புறுத்தி இந்திய நாட்டவர்களுக்கு எதிராக இணையக் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

ஆட்கடத்தல் கும்பல் எதிர்பார்த்த அளவுக்கு ‘வருமானம்’ ஈட்ட முடியாதோருக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுக்கப்பட்டது.

பலரை ஏமாற்றிப் பணம் பறித்தோருக்கு இரண்டு வேளை உணவு கிடைத்தது.

‘மிகச் சிறப்பாக செயல்பட்டோர்’ விழாக்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட இளையர்கள் மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை ஆட்கடத்தல் கும்பலின் பிடியில் சிக்கித் தவித்தனர்.

விசாகப்பட்டினத்தில் மட்டுமே இந்த ஆட்கடத்தல் கும்பல் ஏறத்தாழ 120 கோடி (S$19.5 மில்லியன்) ரூபாய் பறித்தது.

குறிப்புச் சொற்கள்
ஆள்கடத்தல்மோசடிமீட்பு