புதுடெல்லி: திரு சிராஜுல் மியா என்பவரும் அவரது மனைவி ரெஸினா பிபியும் டெல்லி கட்டுமானத் தளம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர்.
இவர்கள் நடுத்தர மக்கள் வாழும் உயர்மாடிக் கட்டடங்களைக் கட்ட உதவுகின்றனர்.
இந்தத் தம்பதி கிட்டத்தட்ட ஓராண்டுக்குமுன் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து, அங்கு தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏதுமில்லாத நிலையில், 1,500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நொய்டாவுக்கு இடம் பெயர்ந்தனர்.
திரு மியா, 43, அவர் மனைவி பிபி, 24, இருவரும் மாதம் 24,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதில் பெரும்பகுதியை தங்கள் பிள்ளைகளுக்கு சேமித்து வைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
நகர்ப்புற இந்தியாவின் விளிம்பில் வசிக்கும் இவ்விருவரும் ஓரறை வீட்டில் தங்கியிருப்பதுடன் தாங்கள் அரசியல் களத்திலும் ஒதுக்கிவைக்கப்பட்டதாக உணர்கின்றனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்கும் அவர்கள், வாக்களிப்பு நாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று அங்கு சென்று வாக்களிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் ரயில் கட்டணம் மற்ற போக்குவரத்து செலவு என ஒருவர் கிட்டத்தட்ட 2,000 ரூபாய் செலவு செய்தால்தான் பீகார் சென்று வாக்களிக்க இயலும்.
மேலும், அவ்வாறு செய்வதானால், தினக்கூலியாக ஈட்டும் சம்பளத்தையும் விட்டுவிட வேண்டியிருக்கும்.
“நான் ஓர் ஏழை. வாழ்க்கைச் செலவினத்துக்கு கடுமையாக உழைக்கிறேன். வீட்டுக்குத் திரும்பி எனது வருமானத்தை இழப்பதால் எனக்கு என்ன பயன்?,” என்று மியா கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தம்பதியரைப் போல் உள்ளூரில் இடம் பெயர்ந்த பல மில்லியன் இந்திய மக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு சென்று வாக்களிக்க வேண்டுமெனில் அதில் உள்ள செலவு காரணமாக தங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019 பொதுத் தேர்தலில், ஏறத்தாழ 300 மில்லியன் (30 கோடி) வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்கள் என்று அது அடையாளம் கண்டது.
அத்தகைய தொழிலாளர்களில் பலரும் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அம்மாநிலங்களில்தான் வாக்குப்பதிவு விகிதமும் குறைவாக இருந்தது.
இந்தியாவில் உள்நாட்டிலேயே கிட்டத்தட்ட 600 மில்லியன் (60 கோடி) பேர் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 140 மில்லியன் (14 கோடி) பேர் அடிக்கடி இடம் மாறுபவர்கள் எனக் கூறப்படுகிறது.

