தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலினம் அறிய 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை

2 mins read
2b6b1374-803e-4d4b-bc01-22ff24c8a277
கோப்புப் படம் - ஊடகம்

லக்னோ: தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்வதற்காக கர்ப்பிணி மனைவியின் வயிற்றை வெட்டிய குரூர மனம் கொண்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரூ.50,000 அபராதமும் விதித்து விரைவு நீதிமன்ற நீதிபதி சவுரப் சக்சேனா தீர்ப்பளித்தார்.

இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உ.பி. மாநிலத்தின் படவுனில் வசித்து வருகிறார் பன்னா லால். அனிதா என்ற மனைவியும் ஐந்து பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று அனிதாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் பன்னா லால்.

இதுகுறித்து கண்டித்த அனிதாவின் பெற்றோரிடம், “உங்கள் மகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஆண் குழந்தைக்குத் தந்தையாகி விடுவேன்,” என்றும் மிரட்டியுள்ளார்.

உள்ளூர் பூசாரி ஒருவர் அனிதாவுக்கு ஆறாவதாகப் பிறக்கும் குழந்தையும் பெண் குழந்தைதான் என்று கூறியதை நம்பி பன்னா லால் அனிதாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில், அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்பதைத் தானே வயிற்றைக் கிழித்துப் பார்த்து தெரிந்துகொள்வதாகக் கூறி அனிதாவின் வயிற்றில் அரிவாளால் வெட்டியுள்ளார் பன்னா லால்.

இதையடுத்து, அனிதா பலத்த காயமடைந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது.

உடனடியாக அனிதாவை மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றினர் அனிதாவின் சகோதரர்.

இந்தச் சூழலில், பன்னா லால் மீது அனிதாவின் உறவினர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தை