தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆறாம் கட்டத் தேர்தல்: பிரபலங்கள் வாக்களிப்பு

3 mins read
மக்களவைத் தேர்தல்: டெல்லியில் பாதுகாப்புப் பணியில் 60,000 காவலர்கள்; ஆளில்லா வானூர்தி மூலமும் கண்காணிப்பு
c02b8c6f-8c7e-478b-b824-dae7e06d779f
வாக்களித்த பின்னர், தாய் சோனியா காந்தி-மகன் ராகுல் காந்தி இருவரும் வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ஃபி எடுத்துக்கொண்டனர். - படம்: ஊடகம்
multi-img1 of 4

புதுடெல்லி: ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் பிரச்சினைகள் எழுந்து அடங்கின. டெல்லியில் பொதுமக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆறாம் கட்ட வாக்களிப்பு 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய நேரம் மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குகள் பதிவானது.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்ற சூழலில், ஆளில்லா வானூர்திகள், சிசிடிவி கேமராக்கள் மூலமும் தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை அதிபர் ஜக்தீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர், முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனது குடும்பத்துடன் சென்று ராஞ்சியில் உள்ள வாக்கு மையத்தில் வாக்களித்தார்.

‘கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு வாக்களியுங்கள்’

சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால், இரு குழந்தைகள், தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவால் ஆகியோருடன் குடும்பமாக வந்து வாக்களித்தார் கெஜ்ரிவால்.

வாக்களித்த பிறகு பேட்டியளித்த கெஜ்ரிவால், “தாயார் உடல்நலம் சரியில்லாததால் வாக்களிக்க வரவில்லை,” என்று கூறியவர், கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

சர்வாதிகாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் சிரமப்படுகின்றனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களும் நானும் வாக்களித்துள்ளோம் என்றார் கெஜ்ரிவால்.

மெகபூபா முப்தி போராட்டம்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் ரஜௌரி தொகுதியில் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தனது தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது தனது ஆதரவாளர்களையும் தேர்தல் முகவர்களையும் காவலர்கள் கைது செய்ததாகக் கூறி அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சில மணி நேரங்களாக தனது கைப்பேசியில் இருந்து யாருக்கும் அழைப்பு போகவில்லை என்றும், இதனைக் காவல்துறையினர் திட்டமிட்டு செய்துள்ளனர் எனவும் முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.

‘உங்கள் வாக்கு ஜனநாயகத்தைக் காக்கும்’

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும், அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியும் டெல்லி நிர்மான் பவன் வாக்கு மையத்தில் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். உங்கள் வாக்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றும் எனத் தெரிவித்த ராகுல் காந்தி, வாக்களித்த பின்னர் தாயுடன் சேர்ந்து வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் மகள் மீராயா வத்ரா முதல்முறையாக சகோதரர் ரைஹான், பெற்றோருடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக்க 24 மணி நேரமும் உழைக்கிறேன்: மோடி

பீகார் மாநிலம், பாட்னாவில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, “இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக்க நான் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

“இந்தத் தேர்தல் என்பது இந்தியாவை வலிமையாக்க 24 மணி நேரமும் உழைக்கும் மோடிக்கும் வேலை இல்லாத இண்டியா கூட்டணிக்கும் இடையே நடப்பதாகும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்