திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த இரு வாரங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கனமழை நீடிக்கும் என்பதால், இங்குள்ள ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் பேசியபோது, “கேரளாவில் மே 9 முதல் மே 23ஆம் தேதி வரை மழையால் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் நீரில் மூழ்கியும் கல்குவாரி விபத்துகள், மின்னல் தாக்குதல், வீடு இடிந்து விழுந்தது ஆகிய சம்பவங்கள் காரணமாக ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.
“சனிக்கிழமைக்குப் பிறகு மாநிலத்தில் மழைப்பொழிவு சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறிய அமைச்சர், நீர்நிலைகள், அவற்றின் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லாமல் தவிர்த்துவிடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
விடுமுறைக் காலத்தில் தனிநபர்கள், குறிப்பாக குழந்தைகள் நீர்நிலை பக்கம் செல்லாமல் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உள்ளூர் அதிகாரிகள், தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) இரு குழுவினர் உள்ளிட்டோர் மாநிலத்தின் எந்த அவசரச் சூழலையும் கையாளும் விதத்தில் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள எட்டு நிவாரண முகாம்களில் இதுவரை 223 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

