புதுடெல்லி: ஆறாம் கட்ட வாக்குப் பதிவில் ஆகக் குறைவான வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6ஆம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா, ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களிலும் டெல்லி, காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 58 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
அத்துடன், ஒடிசா மாநிலத்தின் 42 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு முதலில் மந்தமாக இருந்தது. நேரம் செல்லச்செல்ல சூடுபிடிக்க ஆரம்பித்தது.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 58 மக்களவைத் தொகுதிகளில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.2 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை நடந்து முடிந்த ஆறு கட்டத் தேர்தல்களில் மிகக் குறைவான வாக்குப்பதிவு விகிதம் 6ஆம் கட்ட தேர்தலில்தான் பதிவாகியுள்ளது.
பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வாக்களிக்கவில்லை. பீகாரில் 52.2 விழுக்காட்டினரும் உத்தரப் பிரதேசத்தில் 54.03 விழுக்காட்டினரும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ஹரியானா - 60.4%, ஜம்மு காஷ்மீர் - 54.3%, டெல்லி 57.57% ஜார்க்கண்ட் - 63.76%, ஒடிசா - 69.56%, உத்தரப் பிரதேசம் - 54.03%, மேற்கு வங்கம் - 79.47% என்று வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.