நிறுத்தப்பட்ட பேருந்து மீது லாரி மோதி 11 பக்தர்கள் பலி

1 mins read
2d3f4641-61f6-4b15-be66-bbf61b73270d
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றன. - படம்: இந்திய ஊடகம்

பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பேருந்து மீது லாரி மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அந்த மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் இருந்து சனிக்கிழமை 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது.

செல்லும் வழியில் இரவு உணவுக்காக குதர் பகுதியில் கோலா மாநில நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஒன்றுக்கு அருகில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

பேருந்தில் இருந்த பாதி பயணிகள் இரவு உணவு சாப்பிடுவதற்காக இறங்கிச் சென்ற நிலையில், எஞ்சியோர் பேருந்திலேயே இருந்தனர்.

இரவு 11.10 மணியளவில் கல் ஏற்றிக்கொண்டு வேமாக வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது. அதில் பேருந்து ஒருபக்கமாகக் கவிழ்ந்தது.

இதையடுத்து பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர்.

உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிரேன்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
விபத்து