மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்ப்ரா பகுதியில் குழந்தைகளைக் கடத்தும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்தக் கும்பலில் ஒன்பது பேர் இருந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ராவில், பிறந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத பெண் குழந்தையை விற்க சிலர் முயற்சிப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், குழந்தைகளை விற்க முயன்ற கும்பலை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு மூத்த ஆய்வாளர் சேட்னா சவுத்ரி கூறுகையில், “கடந்த மே 22ஆம் தேதி ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தையை வாங்குவது போன்று போலி வாடிக்கையாளரை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
“மறுநாள் ரெட்டி பந்தர் அருகே குழந்தையை ஒப்படைத்து பணத்தை பெற வந்த ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நபர்கள் பிடிபட்டனர்,” என்றார்
இந்தக் கும்பல் குழந்தைகளைக் கடத்தி, விற்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ஐபிசி பிரிவு 370 (மனித கடத்தல்), சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் மும்ப்ரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

