பாலாகாட்: மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் வனத்துறையில் உள்ள காவலர் பதவிக்கான 25 கிலோ மீட்டர் நடைத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 108 விண்ணப்பதாரர்கள் இந்த உடல் தகுதித் தேர்வில் கலந்துகொண்டனர்.
இதில் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் மவுரியா, 27, என்ற இளைஞரும் கலந்துகொண்டார்.
இந்த தேர்வில் 25 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.
காலை 6 மணியளவில் நடைத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வில் 104 பேர் குறிப்பிட்ட நேரத்திற்குள் 25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தேர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் சலீம் மவுரியா 22 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமானது.
இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையர் உயிரிழந்தது எவ்வாறு என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.