https://www.straitstimes.com/asia/south-asia/indian-police-arrest-hospital-boss-after-six-babies-die-in-fire
புதுடெல்லி: புதுடெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் மே 25ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, உரிமம் பெறாமல் செயல்பட்ட அந்த மருத்துவமனையின் உரிமையாளரையும் அங்குப் பணிபுரிந்த மருத்துவர் ஒருவரையும் காவல்துறையினர் திங்கட்கிழமை (மே 27) கைது செய்தனர்.
கூட்டநெரிசலான சிகிச்சை அறையில் அவசரகாலங்களில் வெளியேற உதவும் வழி அந்த மருத்துவமனையில் அமைக்கப்படாமல் இருந்ததே பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் காவல்துறை தெரிவித்தது.
தீச்சம்பவம் நிகழும்போது அருகில் இருந்தவர்கள் தான் தீக்கு அஞ்சாமல் தைரியமாக உள்ளே நுழைந்து பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றியதாகக் கூறப்பட்டது.
இந்தத் தீவிபத்துக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே முக்கியக் காரணம் என இச்சம்பவத்தில் தனது ஆண்குழந்தையைப் பறிகொடுத்த திரு வினோத் குமார் சோகத்தோடு தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறியது.
தன் குழந்தைக்கு மூச்சி விடுவதில் சிரமம் இருந்ததாகவும் சில தினங்களில் குழந்தை குணமடைந்துவிடும் என மருத்துவர்கள் கூறியதாகவும் அவர், அந்த நாளிதழிடம் தெரிவித்தார்.
“அதற்குள் இந்த மருத்துவமனை என் குழந்தையைக் கொன்றுவிடும் என்று எங்களுக்குத் தெரியாது,” என அவர் மருத்துவமனை நிர்வாகத்தைச் சாடினார்.
“மருத்துவமனையில் அவசரக் காலத்தின்போது வெளியேறும் அமைப்பு அமைக்கப்படவில்லை,” என மூத்த காவல்துறை அதிகாரி சுரேந்திர சவுத்ரி ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவமனையின் உரிமம் மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டதாகவும் உரிமையாளர் சிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த படுக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு படுக்கைகளை அந்த அறைக்குள் அமைத்திருந்ததாகவும் அவர் கூறினார். தீயில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகள் இன்னும் மற்றொரு மருத்துவமனையில் குணமடைந்து வருகின்றனர்.

