திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மூணாறு பகுதியில் சாலையில் நடந்து கொண்டிருந்த படையப்பா யானையால் கார்களில் வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மூணாறிலிருந்து கல்லாறுக்குச் சென்றுகொண்டிருந்தனர் உள்ளூர் மக்கள். அப்போது படையப்பா யானையானது சாலையில் வந்துள்ளது. வழக்கம்போல் யானைகள் வாகனங்களைப் பார்த்தால் அச்சுறுத்தாமல் ஒதுங்கிச் சென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் ஓட்டுநர் காரை ஓட்டிச் சென்றபோது, யானையானது அதுபோல் ஒதுங்கிச்செல்லாமல் தொடர்ந்து எதிரில் வந்து கொண்டிருந்தது.
இதனால், வாகனமோட்டிகள் தங்களது வாகனத்தைப் பின்னோக்கி ஓட்டினர். குறுகிய பாதை என்பதால் இரு கார்களால் இதுபோல் தொடர்ந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வாகனத்தில் வந்தவர்கள் யானையைப் பார்த்து பயந்து கார்களை விட்டு இறங்கி வெளியே ஓடினர்.
அந்தக் காட்சிகள் காணொளியாக தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது ஒரு காரில் இருந்த ஓட்டுநர் சதீஷ் சாதுரியமாக காரை பின்னோக்கி எடுத்து யானை தொடர்ந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததால் படையப்பா யானை மீண்டும் வனப்பகுதிக்குச் சென்றது. பயணிகள் மீண்டும் கார்களில் ஏறிச் சென்றனர்.
படையப்பா யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

