காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்த மேடை சரிந்ததில் அவர் காயமின்றித் தப்பினார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து திங்கட்கிழமை (மே 27) ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். பாலிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் ஏறியபோது, பாரம் தாங்காமல் மேடையின் மையப்பகுதி சற்று உள்வாங்கி சரிந்தது. இதனால் ராகுல் காந்தி, மிசா பார்தி, அவரது சகோதரர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தடுமாறினர். அச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் பாதுகாவலர்களும் பாதுகாப்பு அளிக்க ராகுல் காந்தியை நோக்கி ஓடிவர முயன்றனர். எனினும், நிலைமையைச் சமாளித்த அவர், தமக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறி தொண்டர்களை நோக்கி சைகை காட்டினார்.
மிசா பார்தி ராகுல் காந்தியின் கைகளைப் பிடித்தபடி மேடையின் மறுபக்கம் சென்றபோது மீண்டும் மேடை சரிந்தது. எனினும், அவர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை.
அதேசமயம், தேஜஸ்வி யாதவுக்கு மூட்டுப் பிரச்சினை இருந்ததால் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் தலைவர்களின் பாதுகாப்பு கருதி மேடையில் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பீகார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு உள்ளார். மேடை சரிந்த சம்பவத்திற்குப் பிறகு பல இடங்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.