தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்ப்பிணி மரணம்; தாதியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட உறவினர்கள்

2 mins read
f1bcb8b6-eb9e-48db-a27d-ba5f8b982013
தாதி ஊசி போட்டதும் கர்ப்பிணி மாண்டதாக உறவினர்கள் கூறினர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் உள்ள தனியார் தாதிமை இல்லத்தில் 25 வயது கர்ப்பிணி உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் கொதித்தெழுந்தனர்.

நாளந்தா மாவட்டத்தில் உள்ள அந்தத் தாதிமை இல்லத்துக்குள் புகுந்த அப்பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.

அதுமட்டுமல்லாது, தாதி ஒருவரை இரண்டாவது மாடியிலிருந்து அவர்கள் கீழே தள்ளிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த 35 வயது பூனம் குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் தாதிமை இல்லத்துக்கு விரைந்ததாக பீகார் ஷரிஃப் காவல்துறைக்குத் தலைமை தாங்கும் அதிகாரியான ராமசங்கர் சிங் தெரிவித்தார்.

மாண்ட பெண்ணின் உறவினர்களைச் அமைதிப்படுத்தி மாடியிலிருந்து கீழே விழுந்த தாதியை மீட்டதாகவும் அவர் கூறினார்.

தாதிமை இல்லத்துக்குள் மிகுந்த சீற்றத்துடன் நுழைந்த கும்பலிடமிருந்து தப்பிக்க பூனம் குமாரி மாடியிலிருந்து குதித்ததாக அவர் கூறினார்.

ஆனால் அதை அவரது கணவர் ஏற்க மறுத்தார்.

தமது மனைவியை அந்தக் கும்பல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாக அவர் கூறினார்.

மாண்ட கர்ப்பிணி, சைன்புரா கிராமத்தைச் சேர்ந்த குடியா குமாரி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வயிற்றுவலி காரணமாக அவர் தாதிமை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சையின்போது அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

பூனம் குமாரி அவருக்கு ஊசி போட்டதும், குடியா குமாரியின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்து அவர் மாண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காயமடைந்த தாதியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்