புதுடெல்லி: இந்தியாவின் வடமாநிலங்களில் புதன்கிழமை (மே 29) தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசியது.
குறிப்பாக, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லியில் 52 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் பதிவானது.
அதிலும், டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதேபோனற அதிக வெப்பம் அடுத்த இரு நாள்களுக்கும் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து 18வது நாளாக வெப்ப அலை வீசியது அந்த மாநிலத்தில் சுரு என்னும் பகுதியில் 50.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தலைநகர் புதுடெல்லியில் 52 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் பதிவானதைத் தொடர்ந்து நாட்டின் வடமேற்கில் இருக்கும் பல பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் புதன்கிழமையன்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.
மக்களுக்கு வெப்பத் தாக்கத்தால் வரக்கூடிய நோய்கள் ஏற்பட மிக அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதையும் எளிதில் நோய்தாக்கும் அபாயம் இருக்கும் மக்கள் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்தச் சிவப்பு எச்சரிக்கை குறிப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மே மாதம் வெப்பநிலை அதிகரிப்பது வழக்கம் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலான வெப்ப அலைகளுடன் மக்கள் போராடி வருவதாக நிலையம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், புதுடெல்லி உட்பட பல பகுதிகளில் வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை வரை நிலைமைகள் தொடரக்கூடும் என்று நிலையம் எச்சரித்துள்ளது.
வெப்பநிலை அதிகரித்து வருவதால் தண்ணீர் விநியோகத்திற்குப் புதுடெல்லி மாநில அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், அம்மாநிலத் தண்ணீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் யமுனை நதியின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் மூவர் வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவர்களையும் சேர்த்து வெப்பத்தாக்கத்தால் புதுடெல்லியில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 13ஆக உயர்ந்துள்ளது.

