புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், 48 மணி நேரத்துக்குள்ளாக பிரதமர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஜெயராம் ரமேஷ், “இந்த தேர்தலில் நாங்கள் தெளிவான, தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறுவோம். எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கைக்குள் நுழைய விரும்பவில்லை. 273 என்பது தெளிவானது ஆனால் தீர்க்கமானது அல்ல. தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மை என்று சொன்னால், அது 272 க்கு மேல் என்று அர்த்தம்,” என்று கூறினார்.
“2004 தேர்தல் முடிவுக்குப் பிறகு 3 நாள்களுக்குள் டாக்டர் மன்மோகன் சிங்தான் பிரதமர் என அறிவித்தோம். பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சோனியா காந்தி தெளிவுபடுத்திய பிறகு, டாக்டர் மன்மோகன் சிங்தான் பிரதமர் என்பது அனைவருக்கும் தெரியும்.
“சோனியா காந்தி செய்த மிகப் பெரிய தியாகம் அது. மன்மோகன் சிங்கின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க மூன்று நாள்களுக்கும் குறைவாகவே அப்போது கட்சி எடுத்துக்கொண்டது. ஆனால், இம்முறை 48 மணி நேரம்கூட தேவைப்படாது என்றே எண்ணுகிறேன். எந்த கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளதோ அந்த கட்சி, கூட்டணி ஆட்சியை வழிநடத்தப் போகிறது,” என்றும் திரு ஜெயராம் தெரிவித்தார்.
“முதல் இரண்டு கட்ட தேர்தலுக்குப் பிறகு, மாற்றத்துக்கான காற்று வீசுவது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. தென் இந்தியாவில் பாஜக முழுமையாக துடைத்தெறியப்படும். வடக்கிலும் அதன் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.
“2004ல் பெற்றதுபோல், தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மையை இண்டியா கூட்டணி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மற்றொரு விஷயத்தையும் சொல்கிறேன். 7ஆம் கட்ட தேர்தலின் முடிவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். 2004ல் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறப் போகிறது என கூறின. ஆனால், உண்மையான முடிவு வேறுவிதமாக இருந்தது.
“இந்திய ஒற்றுமை யாத்திரைதான் மாற்றத்துக்குக் காரணம். இது ராகுல் காந்திக்கு இணைப்பை ஏற்படுத்தியது, அமைப்புக்கு வலிமையை அளித்தது. இதனையடுத்து, முன்னோக்கி செல்லப்பட்டது. இதன்மூலம் ஒரு வடிவமும் கொடுக்கப்பட்டது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், ஐந்து கருப்பொருள்களில் வெவ்வேறு உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை நாங்கள் எங்கள் கருத்துகளை, வலுவாக, கூர்மையாக, தெளிவாக முன்வைத்துள்ளோம். காங்கிரசின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும். நீங்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும், ஒத்திசைவாக இருக்க வேண்டும், சரியான நேரத்தில் சரியானதை சொல்ல வேண்டும், இதன் மூலம் நீங்கள் உங்கள் கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். இதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்,” என திரு ஜெயராம் விவரித்துள்ளார்.