புதுடெல்லி: பிரதமர் பதவிக்குரிய மாண்பை நரேந்திர மோடி சீர்குலைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்; பிரதமர் அலுவலகத்தின் தகுதியையும் அதன் முக்கியத்துவத்தையும் மோடி மலிவானதாக்கி விட்டார். தேர்தல் பிரசாரம் முழுவதும் வெறுப்புப் பேச்சையே நரேந்திர மோடி பேசி வருகிறார்.
குறிப்பிட்ட சமுதாயத்தினரையும் எதிர்க்கட்சிகளையும் தரம் தாழ்ந்த முறையில் மோடி விமர்சித்து வருகிறார். தனது வாழ்க்கையில் சமூகங்களுக்கு இடையில் எந்த பாகுபாட்டையும் தான் காட்டியதில்லை என்று மோடி பேச்சுக்கு மன்மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மோடி பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நான் உன்னிப்பாக கவனித்து வந்துள்ளேன். அவரது பிரசாரங்கள் பலவற்றில் அவரது வெறுப்புப் பேச்சைத்தான் கேட்கமுடிந்தது.
நாட்டின் வளங்களில் ஒரு பிரிவினருக்குத்தான் முன்னுரிமை என்று நான் கூறியதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். எனது வாழ்க்கையில் அதுபோன்ற நாட்டு மக்களை பிரித்துப்பார்த்து பாகுபாடு காட்டி ஒருபோதும் பேசியதில்லை. இதுபோன்று பேசுவதெல்லாம் பாஜகவுக்கே உரித்த கைவந்த கலை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலின் 7ஆம் கட்ட வாக்குப் பதிவில் பஞ்சாப் மாநில வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியால்தான் ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டம் பாதுகாக்கப்படும்.
சர்வாதிகாரத்தை ஒழிப்பதற்கு, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் கவனத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

